கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவியை மீட்டு தரக்கோரி சேலம் போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தற்கொலை முயற்சி- தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவியை மீட்டு தரக்கோரி சேலம் போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தற்கொலை முயற்சி- தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2021 3:29 AM IST (Updated: 6 July 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

கடத்தி செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவியை மீட்டுத்தரக் கோரி சேலம் போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
கடத்தி செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவியை மீட்டுத்தரக் கோரி சேலம் போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவி கடத்தல்
சேலம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஷ்குமார் (வயது 48). இவருடைய மகள் சேலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே மாணவியின் தந்தை சதீஷ்குமார், கெங்கவல்லி போலீசில் புகார் மனு கொடுத்தார். 
அதில், பிளஸ்-2 படித்து வரும் என்னுடைய மகளை நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன முருகேசன் என்பவர் கடத்தி சென்று விட்டார். 40 வயதான அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரிடம் இருந்து என்னுடைய மகளை மீட்டுத்தாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், மகளை மீட்டுத்தர வேண்டும் என்று சதீஷ்குமார் புகார் செய்தார்.
தர்ணா போராட்டம்
2 போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து 2 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவியின் தந்தை சதீஷ்குமார், மனைவி செந்தில் செல்வி மற்றும் உறவினர்களுடன் நேற்று சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். 
அங்கு, தான் கொடுத்த புகார் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று போலீசாரிடம் கேட்டதாகவும், அதற்கு போலீசார் அளித்த பதில் சதீஷ்குமாருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மனைவி செந்தில் செல்வி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்கொலை முயற்சி
அப்போது சதீஷ்குமார் தான் வைத்திருந்த விஷத்தை திடீரென குடிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பிடுங்கினார். இன்னொரு பக்கம் மாணவியின் தாய் உடலில் மண்எண்ணெயை ஊற்ற முயன்றார். அவர் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலையும் போலீசார் பிடுங்கினர்.
இப்படி கணவன்- மனைவி இருவரும் ஆளுக்கொரு பக்கம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை மேலும் அதிகரித்தது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடும் வாக்குவாதம்
பேச்சுவார்த்தையின் போது போலீசாருக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் போலீசார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவியி்ன பெற்றோர் சமாதானம் அடைந்தனர். 
மேலும் மாணவியை விரைவில் கண்டுபிடித்து தருகிறோம் என்று போலீசார் கூறினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
மீட்டுத்தர வேண்டும்
இதுகுறித்து மாணவியின் தந்தை சதீஷ்குமார் கூறுகையில், எனது மகளை முருகேசன் என்பவர் கடத்தி சென்றதாக புகார் மனு கொடுத்து 2 மாதங்கள் ஆகிறது. இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து என்னுடைய மகளை மீட்டுத்தர வேண்டும் என்றார்.

Next Story