குமரியில் குற்ற செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை: போலீசார் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி


குமரியில் குற்ற செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை: போலீசார் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி
x
தினத்தந்தி 6 July 2021 5:53 PM IST (Updated: 6 July 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்கிறார்கள். இந்த பணியை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ேராந்து பிரிவு போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரோந்து பிரிவு போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் சட்டையில் பொருத்த கூடிய கேமரா ஆகியவற்றை ஒப்படைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குற்றச் செயல்களை தடுக்க தற்போது ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக குமரி மாவட்டத்தை 92 பகுதிகளாக பிாித்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. போலீசாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் சட்டையில் பொருத்தும் கேமரா ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதிகளின் முழு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் வசிக்கிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவர்களை கண்காணிப்பது அவசியம்.

பொதுமக்களையும் தினமும் சந்தித்து பேச வேண்டும். பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் விதமாக வாட்ஸ்-அப் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் போலீசாரின் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக வெளியிட வேண்டும். அதோடு ரோந்து செல்லும் இடங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய வேண்டும். ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட போலீசாரை போலீஸ் நிலைய பணிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ேராந்து செல்லும் போது கட்டாயம் சட்டையில் கேமரா பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story