குழந்தைகள் காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேனி அருகே குழந்தைகள் காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
தேனி:
மதுரையில் ஒரு அறக்கட்டளையின் பெயரில் நடந்து வந்த ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகி உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் ஆய்வு செய்து, குழந்தைகள் விற்பனை எதுவும் நடந்துள்ளதா? குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்ய சமூக நல அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோருக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு கலெக்டர் முரளிதரன் நேற்று திடீரென சென்றார். அங்கு குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா? கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
காப்பகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தார். குழந்தைகளுக்கு வழங்க சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள், குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். ஆய்வின் போது சமூக நலத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story