போலி பீடிகள் பறிமுதல்


போலி பீடிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 July 2021 7:57 PM IST (Updated: 6 July 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி பகுதியில் போலி பீடிகள், டீத்தூள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

இந்தநிலையில் பட்டிவீரன்பட்டி துர்க்கையம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் போலி பீடிகள், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்குள் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பீடி பண்டல்கள், புகையிலை பொருட்கள், டீத்தூள், மிட்டாய்கள் ஆகியவை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த வீட்டில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான போலி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி பொருட்களை பதுக்கி வைத்து சின்னக்கவுண்டன்பட்டியை சேர்ந்த கரியமால் (வயது 50) என்பவர் கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

 இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு போலி பொருட்களை வினியோகம் செய்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story