கோழிக்கூண்டுக்குள் பதுங்கி இருந்து முட்டைகளை தின்ற நாகப்பாம்பு
வேடசந்தூர் அருகே, ஒரு மாதமாக கோழிக்கூண்டுக்குள் பதுங்கி இருந்து முட்டைகளை தின்ற நாகப்பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர்.
வேடசந்தூர்:
முட்டைகள் மாயம்
வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் திருமலைச்சாமி. விவசாயியான இவர், தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்.
கோழிகளை அடைப்பதற்காக தோட்டத்துக்குள் தனியாக கூண்டு அமைத்துள்ளார். அதற்குள் தினமும் 40 கோழிகள் வரை முட்டையிட்டன. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது முட்டைகள் மாயமாகின.
மேலும் சில முட்டைகளின் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு உறிஞ்சப்பட்டு கூடுகள் மட்டும் கிடந்தன. இதனை கண்ட திருமலைச்சாமி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் கோழிக்கூண்டை தொடர்ந்து கண்காணித்தார்.
ஆனால் மனிதர்கள் யாரும் முட்டைகளை திருடவில்லை என்று அவருக்கு தெரியவந்தது. அப்படி இருந்தும் முட்டைகள் மாயமாகி இருப்பது திருமலைச்சாமிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
4 அடி நீள நாகப்பாம்பு
இந்தநிலையில் நேற்று காலை திருமலைச்சாமி தனது தோட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோழிக்கூண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து முட்டையை கொத்தி உறிஞ்சி குடித்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் அந்த பாம்பை உயிருடன் அவர்கள் பிடித்தனர். அது, 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஆகும்.
அதனை வனப்பகுதியில் கொண்டு தீயணைப்பு படையினர் விட்டனர். கடந்த ஒரு மாதமாக கோழிக்கூண்டுக்குள் புகுந்து, முட்டைகளை தின்ற நாகப்பாம்பு சிக்கிய பிறகே திருமலைச்சாமி நிம்மதி அடைந்தார்.
Related Tags :
Next Story