ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க நீலகிரிக்கு கூடுதல் மண்எண்ணெய்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க நீலகிரிக்கு கூடுதல் மண்எண்ணெய்
x
தினத்தந்தி 6 July 2021 9:50 PM IST (Updated: 6 July 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க நீலகிரிக்கு கூடுதல் மண்எண்ணெய் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று உணவு ஆணைய மாநில தலைவர் பேட்டியின்போது கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமை தாங்கி, பழங்குடியினர்களில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் வரக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு, 2 தவணையாக ரூ.2,000 வழங்கியது குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பழங்குடியின மக்கள், மூன்றாம் பாலினத்தவர், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள் உள்பட அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

கிராமங்களில் இருந்து பழங்குடியினர்கள் அலுவலகத்துக்கு வரும்போது, பல்வேறு பணிகள் காரணமாக அலுவலர்கள் இல்லாததால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் கிராமங்களில் முகாம்கள் அமைத்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விவாகரத்து சான்றிதழ் இல்லையென்றால் கணவரின் சம்மதம் வாங்கியோ அல்லது சம்மதம் இல்லாமலோ ரேஷன் கார்டில் பெயரை நீக்கி புதியதாக ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றன.

தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கார்டில் பெயர் உள்ளவர்கள் வந்து பொருட்கள் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நீலகிரி மக்களுக்கு மண்எண்ணெய் முக்கியமானது. தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்எண்ணெய் ஒதுக்கீடு குறைந்து உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடுதலாக மண்எண்ணெய் கிடைக்க பரிந்துரை செய்யப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதவி கலெக்டர்கள் மோனிகா (ஊட்டி), தீபனா விஸ்வேஸ்வரி (குன்னூர்), கூடலுர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story