அரூர் அருகே செல்போன் கோபுரம் இல்லாததால் மலை உச்சிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கவலை


அரூர் அருகே செல்போன் கோபுரம் இல்லாததால் மலை உச்சிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கவலை
x
தினத்தந்தி 6 July 2021 9:58 PM IST (Updated: 6 July 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே மலை கிராமங்களில் செல்போன் கோபுரம் இல்லாததால் மலை உச்சிக்கு சென்று மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள். இதனால் தங்களது கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அரூர்:
அரூர் அருகே மலை கிராமங்களில் செல்போன் கோபுரம் இல்லாததால் மலை உச்சிக்கு சென்று மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள். இதனால் தங்களது கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மலை கிராமங்கள்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தாதரவலசை, தோல்தூக்கி ஆகிய மலை கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 4 மலை கிராமங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 
இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கீரைப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு சென்று கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் பாதிப்பு
இந்தநிலையில் வாழைத்தோட்டம் உள்பட 4 மலை கிராமங்களிலும் செல்போன் கோபுரம் இல்லாததால் அங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று கல்வி பயில முடியாமல் தவித்து வருகிறார்கள். சில மாணவ-மாணவிகள் கிராமத்தின் அருகே உள்ள மலை உச்சிக்கு சென்றும், மரங்களில் ஏறி கிளைகளில் அமர்ந்தும் செல்போன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தாதரவலசை, தோல்தூக்கி ஆகிய கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் மலை உச்சிக்கு சென்றும், மரங்களில் ஏறி கிளைகளில் அமர்ந்தும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்து வருகிறோம்.
கல்வி கேள்விக்குறி
சில மாணவ-மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலைப்பகுதிக்கு செல்ல தயங்குகிறார்கள். மேலும் சிலர் பாடம் படிக்க தங்களது பெற்றோருடன் மலை உச்சிக்கு செல்கிறார்கள். செல்போன் கோபுரம் இல்லாததால் கல்வி கேள்விக்குறியாகி உள்ள சூழலில், படிக்க ஆசைப்படும் சில மாணவிகளுக்கு பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
எனவே எங்கள் கிராமங்களில் செல்போன் கோபுரம் அமைத்து மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story