கோவையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்
விதிகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் குவிவதால் கோவையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை
விதிகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் குவிவதால் கோவையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதுடன், பஸ் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பரவல் இருப்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
காற்றில் பறக்கும் அறிவுரைகள்
ஆனால் கோவையில் அந்த அறிவுரைகள் காற்றில் பறந்து உள்ளது. பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. அத்துடன் முகக்கவசமும் அணிவது இல்லை.
ஒருசிலர் அணிந்து இருந்தாலும் அவர்கள் மூக்குப்பகுதியை மூடுவது இல்லை. மேலும் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளதால், அவற்றில் ஏறும் போது யாரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை.
கூட்ட மாக முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதுபோன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீண்டும் பரவும் அபாயம்
கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் குவிவதால் கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபோன்று கட்டுமான பணிக்காக தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் சென்றனர். அதில் இருக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து 10 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ வெளியே வந்தது. மேலும் ஒரு சில ஆட்டோ மற்றும் கார்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
பொதுமக்களின் வசதிக்காகதான் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் யாரும் விதிகளை கடைபிடிப்பது இல்லை. இவ்வாறு செய்வதால் கண்டிப்பாக கொரோனா பரவக்கூடிய நிலை ஏற்பட்டு விடும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசத்தை சரியாக அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் பஸ்கள்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, கோவையில் பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story