2 கார்களின் கண்ணாடிகள் அரிவாளால் வெட்டி உடைப்பு


2 கார்களின் கண்ணாடிகள் அரிவாளால் வெட்டி உடைப்பு
x
தினத்தந்தி 6 July 2021 10:45 PM IST (Updated: 6 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 2 கார்களின் கண்ணாடியை அரிவாளால் வெட்டி உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை

கோவையில் வீட்டின்  முன்பு நிறுத்தியிருந்த 2 கார்களின் கண்ணாடியை அரிவாளால் வெட்டி உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

2 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு 

கோவை காந்திபுரம் 5-வது வீதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் கணினி என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார். 

இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று அருகில் நிறுத்தப்பட்டு இருந்த சுரேஷ்குமாரின் காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கார்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அரிவாளால் வெட்டும் காட்சி பின்னர் அவர்கள் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவதும், அதில் பின்னால் அமர்ந்து இருந்தவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் 2 கார்களின் கண்ணாடிகளை வெட்டிவிட்டு தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது. 

2 பேருக்கு வலைவீச்சு 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேர் யார்? எதற்காக அரிவாளால் வெட்டி கார் கண்ணாடிகளை உடைத்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 


Next Story