கைதானவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வனத்துறையினர் பரிந்துரை
காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் கைதானவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வனத்துறை யினர் பரிந்துரை செய்துள்ளனர்.
கோவை
காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் கைதானவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வனத்துறை யினர் பரிந்துரை செய்துள்ளனர்.
4 பேர் கைது
மருதமலையில் காட்டுப்பன்றியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கோவையை சேர்ந்த அசோக்குமார் (வயது 49) சசி குமார், சம்பத்குமார், தேவராஜ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இதில் அசோக்குமார் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர்
கோவை பி.என்.புதூரை சேர்ந்த அசோக்குமார் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தேசிய சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவில் துப்பாக்கி சுடும்பயிற்சி பெற்றார்.
ஆனால் அவருடைய ஆசை நிறைவேற வில்லை. இதனால் அவர் வேட்டை கும்பலுடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்து உள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு சிறுமுகை பகுதியில் வேட்டையாடிய வழக்கில் பிடிபட்ட இவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு வனவிலங்குகளை வேட்டையாடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டபோது இவருடைய துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்பட்டது.
கலெக்டருக்கு பரிந்துரை
அதன் பிறகும் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நரசிபுரம் பகுதியில் வேட்டையாடும்போது நாட்டு துப்பாக்கிகளுடன் சிக்கினார்.
தற்போது மீண்டும் மருதமலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடி உள்ளார்.வனவிலங்குகளை குறிபார்த்து சுடுவதில் கைதேர்ந்தவரான அசோக் குமார், இந்த கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு உள்ளார்.
தொடர்ந்து அவர் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story