சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்றது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து முதல் கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரத்தில் வலம் வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
காலை 7.45 மணிக்கு விழா கொடியை கனகசபேச தீட்சிதர் ஏற்றினார். அதை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்திலேயே வலம் வந்து மண்டபத்திற்கு சென்றனர்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், நேற்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்திலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிப்படுவார்களா? என்கிற கேள்வி இருந்து வந்தது.
ஆனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் தீட்சிதர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். மேலும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இ்ல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரங்களில் அனுமதி
அதாவது, விழா நடைபெறும் நேரங்களில் மட்டும் பக்தர்கள் அனுமதி கிடையாது, அன்றைய தினத்தில் குறிப்பிட்ட நேரங்களில் சென்று நடராஜரை தரிசித்து வரலாம். அதன்படி நேற்று கொடியேற்றம் முடிந்த பின்னர், காலை 9 மணிக்கு மேல் 12 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் கொடியேற்றத்தின் போது, பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் கோவிலில் நான்கு கோபுர வாசல்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாக்களின் போது, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி மவரையும் பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
தேரோட்டம்
அதேபோல், 10 நாட்கள் நடைபெறும் விழாவும் கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற உள்ளது. இதில் சிகர திருவிழாவான 14-ந்தேதி தேரோட்டம், 15-ந்தேதி ஆனிதிருமஞ்சனம் ஆகியனவும் பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகார பகுதியிலேயே நடைபெற இருக்கிறது.
அன்றைய தினங்களில் விழா முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் நடராஜரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமாக இந்த விழாவின் போது கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
ஆனால் தற்போது பெருந்தொற்று காலம் என்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story