சுல்தான்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு


சுல்தான்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 6 July 2021 11:09 PM IST (Updated: 6 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டாம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த சிவானந்தம் என்பவரின் மனைவி பரமேஸ்வரி (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு சரண்யா (26) என்ற மகள் உள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவானந்தம் யானை தாக்கி இறந்துவிட்டார். இதனால் பரமேஸ்வரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பரமேஸ்வரியும், சரண்யாவும் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

 இதற்கிடையில், சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது பரமேஸ்வரியின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனடியாக இதுகுறித்து பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

18 பவுன் நகை திருட்டு

இதனால் பதறியடித்து பரமேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த 18 பவுன் நகை, மற்றும் ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. ஆனாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

சுல்தான்பேட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story