பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மேம்பால திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
பொள்ளாச்சி நகரில் ரவுண்டானா அமைத்தும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே மேம்பால திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் ரவுண்டானா அமைத்தும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே மேம்பால திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேம்பாலம் திட்டம்
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வளர்ந்து வரும் நகரமாகும். வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் தமிழக-கேரள எல்லையையொட்டி இருப்பதாலும், சுற்றுலா சார்ந்த பகுதி என்பதால் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பொள்ளாச்சி வழியாக செல்கின்றன.
நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ரூ.100 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பாலம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் செலவில் மண் பரிசோதனையும் நடைபெற்றது. ஆனால் அந்த திட்டம் அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டது.
மேம்பாலத்திற்கு மாற்றாக நகரில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இதற்கிடையில் காந்தி சிலை, பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க அமைக்கப்பட்ட ரவுண்டானா திட்டம் பலன் அளிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
போக்குவரத்து நெருக்கடி
பொள்ளாச்சி நகரம் காலை, மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.100 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக மேம்பால திட்டத்தை கிடப்பில் போடப்பட்டனர். அந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தற்போது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் அந்த திட்டத்திற்கு பதிலாக சாலை விரிவாக்கம் செய்வதற்கு அரசு, தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
வாகன போக்குவரத்து மிகுந்த காந்தி சிலை, பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கும் ரவுண்டானா திட்டம் வாகன நெருக்கடிக்கு பலன் அளிக்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் பஸ் இயங்குவதால் நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நாலாபுறமும் வரிசையில் நிற்கின்றன.
நகரின் வளர்ச்சி
இதற்கு முன் ஒரு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். தற்போது காந்தி சிலை பகுதியில் 4 போலீசார் நின்றும் போக்குவரத்தை சரிசெய்ய முடியவில்லை. இதன் காரணமாக கோவை ரோட்டில் இருந்து உடுமலை சாலைக்கு செல்லும் வாகனங்களை நியூஸ்கீம் ரோடு வழியாக திருப்பி விட்டு உள்ளனர்.
இதற்காக தடுப்புகள் வைத்து உள்ளனர். தற்போதே வாகன நெருக்கடியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதே ஊரடங்கு முழுமையாக முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் வாகன எண்ணிக்கை அதிகரித்து விடும். தற்போது சாலை விரிவாக்கத்திற்கு போதுமான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே நாளுக்கு நாள் பெருகி வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி நகரில் கிடப்பில் கிடக்கும் மேம்பால திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story