மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம்-கலெக்டர் தகவல்


மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 July 2021 11:10 PM IST (Updated: 6 July 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் உலக விலங்கின நோய் தினத்தையொட்டி வளர்ப்பு பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சிரஞ்சீவிராஜ், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் முகமதுகான், பூச்சியியல் நிபுணர் ரமேஷ், நகராட்சி மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சுரேஷ், மருத்துவ ஆய்வாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிமோனியா

அதன் பின்னர் மானாமதுரையை அடுத்த புளிக்குளம் பகுதியில் கால்நடைப்பராமரிப்புத்துறையின் மூலம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
 சின்னக்கண்ணனூர் ஊராட்சியில் புளிக்குளம், சின்னக்கண்ணனூர், மாடங்காத்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் ஆடுகள் இறந்ததாக வந்த தகவலையடுத்து, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினரை உடனடியாக செல்ல உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்ததில் அவைகள் நிமோனியா நோய் தாக்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

மற்ற ஆடுகளுக்கு அந்த நோய் பரவாத வண்ணம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரடியாக சென்று பாதிப்பு பரவாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவக்குழுவானது பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. முழுமையாக குணமடையும் வரை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வர அறிவுரை வழங்கப்பட்டது.
 எனவே, விவசாயிகள் ஆடுகளுக்கு நோய்கள் தாக்காத வண்ணம் மருத்துவக்குழுவினரை அணுகி தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சிரஞ்சீவிராஜ், உதவி இயக்குனர்கள் ஜோசப் அய்யாத்துரை, ராம்குமார், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story