நெல்லை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியும் காலியானது


நெல்லை மாவட்டத்தில்  கோவிஷீல்டு தடுப்பூசியும் காலியானது
x
தினத்தந்தி 7 July 2021 12:37 AM IST (Updated: 7 July 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியும் நேற்றுடன் காலியானது. பல்வேறு இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியும் நேற்றுடன் காலியானது. பல்வேறு இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 வகையான தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா 2-வது அலையால் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
இதையடுத்து தடுப்பூசி மையங்களுக்கு அதிகமான பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் போதுமான அளவுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதனால் அவ்வப்போது கிடைக்கும் மருந்தைக்கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தட்டுப்பாடு

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி இல்லை. இதனால் ஏற்கனவே முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, 2-வது தவணையாக தடுப்பூசி போட முடியவில்லை.
இதுதவிர கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு, மருந்து இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதுவும் நேற்றுடன் தீர்ந்து விட்டதாக தெரிகிறது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி கொண்டு வரப்பட்டால் மட்டுமே பொதுமக்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story