கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
தா.பழூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
உண்டியல் பூட்டு உடைப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதியில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அய்யனார், மதுரைவீரன், நொண்டி வீரன், சங்கிலி கருப்பு, சப்த கன்னியர்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் கலியபெருமாள் என்ற பூசாரி பூஜைகள் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்ற அவர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் செய்ய வந்தார். அப்போது மதுரைவீரன் சன்னதியில் மதுரைவீரன் சிலைக்கு நேர் எதிரில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டு தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் உடனடியாக கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
திருட்டு
இதையடுத்து கோவிலுக்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்ததை கண்டனர். இதுகுறித்து அவர்கள் தா.பழூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்து பார்வையிட்ட இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காசாங்கோட்டை கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் 2 பேர் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனடியாக அவர்களை கையும், களவுமாக பிடித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
2 பேர் கைது
அவர்களிடம் விசாரித்த விக்கிரமங்கலம் போலீசாரிடம், சிந்தாமணி மதுரைவீரன் கோவிலில் திருடிவிட்டு தப்பி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார், தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார்.
விசாரணையில் அவர்கள், தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் இருளர் தெருவைச் சேர்ந்த காசிநாதன் மகன் முருகானந்தம்(வயது 27), செல்வராசு(51) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட ரூ.810 கைப்பற்றப்பட்டது. பின்னர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story