காவலாளி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே மனைவிக்கு பாரமாக இருக்க கூடாது என கருதி காவலாளி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழி அருகே மனைவிக்கு பாரமாக இருக்க கூடாது என கருதி காவலாளி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரெயில் முன் பாய்ந்தார்...
ஆரல்வாய்மொழி அருகே ராஜாவூர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் அந்த நபரை நெருங்கி வருவதை கண்ட பொதுமக்கள் அபாய கூச்சலிட்டனர். ஆனால் அந்த நபர் ரெயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் அந்த நபர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர், உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரைட், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலை செய்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குலசேகரன்புதூர் ராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பெனடிக்ட் ஜோதி (வயது 65) என்பது தெரிய வந்தது. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடிதம் சிக்கியது
இதற்கிடையே தற்கொலை செய்த நபரின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் எழுதி இருந்ததாவது:-
“எனது பெயர் பெனடிக்ட் ஜோதி. எனக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இதனால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இருப்பினும் எனது மனைவி என்னை அன்புடன் நன்றாக கவனித்து வந்தாள். ஆனால் நான் எனது மனைவியை மேலும் கஷ்டப்படுத்துவதுபோல் உணர்கிறேன். அவருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. இதனால் எனது உயிரை மாய்த்து கொள்ள இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story