எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தும் பணிகள் தயார்; மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
95 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்தும் பணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: 95 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்தும் பணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வருகிற 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலமாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை முடிந்ததும் மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், இந்த தேர்வை மிகவும் பாதுகாப்பாகவும், மாணவ, மாணவிகளுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாத வண்ணமும் நடததுவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்சமயம் வரை தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 95 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரும் தேர்வு தொடங்குவதற்கு முனபாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.
பணிகள் தயார்
தற்போது கொரோனா 2-வது அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. தேர்வுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், அதற்கு முன்பாக கொரோனா பாதிப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்களுக்கு, அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் இருந்தபடியே தேர்வு எழுத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் சிக்கமகளூரு, உடுப்பி, தட்சிண கன்னடா, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வை எழுதி விட்டு மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், தேர்வு மையங்கள் அருகேயே தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எந்த பிரச்சினையும் இன்றி நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த கல்வித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story