கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் இல்லை; மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி


மந்திரி முருகேஷ் நிரானி.
x
மந்திரி முருகேஷ் நிரானி.
தினத்தந்தி 7 July 2021 2:39 AM IST (Updated: 7 July 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் இல்லை என்றும், அங்கு செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் இல்லை என்றும், அங்கு செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

சுமலதா எம்.பி. குற்றச்சாட்டு

மண்டியா மாவட்டத்தில் கே.ஆர்.எஸ். அணை உள்ளது. அந்த அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், விரிசல் ஏற்படுவதற்கு அணையை சுற்றி நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகள் மற்றும் பிற சுரங்க தொழில்கள் காரணம் என்று மண்டியா தொகுதியின் எம்.பி.யான சுமலதா குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சுமலதாவுக்கும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மந்திரி முருகேஷ் நிரானியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அணையில் விரிசல் இல்லை

கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. கே.ஆர்.எஸ். அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அணையில் எந்த விதமான விரிசலும் இல்லை. அணையில் இருந்து எந்த பகுதிகளிலும் தண்ணீர் கசியவில்லை. கே.ஆர்.எஸ். அணையை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கல்குவாரிகள், பிற கனிம தொழில்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

மேலும் கே.ஆர்.எஸ். அணையை சுற்றி நடைபெறும் கல்குவாரிகள் குறித்து விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளது. கல்குவாரிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்கவும், ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.

Next Story