புனேவில் இருந்து விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன


புனேவில் இருந்து விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
x
தினத்தந்தி 7 July 2021 2:18 AM GMT (Updated: 7 July 2021 2:18 AM GMT)

புனேவில் இருந்து விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வருகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு பல கட்டங்களாக தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. மேலும் தமிழக அரசும் தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கிடையே தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பின் வழியாகவும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 57 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 58 லட்சம் பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து விமானம் மூலம் 9 பெட்டிகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று வந்தன. இந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமான நிலையத்தில் இருந்து பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தடுப்பூசிகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story