நீடாமங்கலத்தில், மேம்பாலம் கட்டும் பணிகள் வேகம் எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நீடாமங்கலத்தில் காலம், காலமாக போக்குவரத்து நெருக்கடி பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலம் கட்டும் பணிகள் வேகம் எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. தாலுகாவின் தலைநகரமாகவும், பேரூராட்சி தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் நீடாமங்கலத்தில் உள்ளன.
நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டும் இயங்கி வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலம் நகர் என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது போக்குவரத்து நெருக்கடி மட்டுமே.
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நெல்லை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றன.
இதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் ்இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இவை தவிர நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளும், இருசக்கர வாகனங்களும் நீடாமங்கலத்தை கடந்து சென்று வருகின்றன. இதன் காரணமாக நீடாமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும். காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை, திருச்சி மார்க்கத்துக்கு பயணிகள் ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரை, மயிலாடுதுறை, சென்னை, கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கும் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு செல்லும் சரக்கு ரெயில்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு உரம், நெல், அரிசி ஏற்றி செல்லும் சரக்கு ரெயில்களும் நீடாமங்கலம் வழியாக பயணிக்கின்றன. நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் பொருட்கள் ஏற்றும் பணி நடந்தால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.
நீடாமங்கலத்தில் ெரயில்வேகேட் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் பலமணிநேரம் சாலையில் அணிவகுத்து நிற்பதை காணலாம். நீடாமங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ெரயில்வேகேட், தஞ்சை சாலையில் ஒரத்தூர் ெரயில்வேகேட், ஆதனூர் ெரயில்வேகேட் நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் கப்பலுடையான் ெரயில்வே கேட் என அடுத்தடுத்து ரெயில்வே கேட்டுகள் உள்ளதால் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவும், உள்ளூர் மக்கள் நிம்மதியாக கடை வீதிக்கு சென்று வர வசதியாகவும் இருக்க நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீ்ட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர். ெரயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமைய வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகும். எனவே உடனடியாக கீழ்ப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ெரயில்வே உயரதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். மத்திய அரசும் ரூ.44 கோடியே 47 லட்சத்தை நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்க ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் அமைக்க மண் ஆய்வும் நடத்தப்பட்டது. அதன் பின் எந்த பணியுமே நடைபெறவில்லை. இதற்கு காரணம் மேம்பாலம் அமையும் பகுதியில் (ஒரத்தூர் கிராமம்) நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை போக்கிட மேம்பாலம் அமைத்திடும் பணியை வேகம் எடுக்க செய்ய வேண்டும். இருவழிச்சாலை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். இந்த 2 பணிகளுக்கும் இடையே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story