கோட்டூர் அருகே வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்
கோட்டூர் அருகே வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர் ஊராட்சி வீராக்கி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன்மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
அந்த குடிநீரும் நாளடைவில் உப்பு தன்மை அதிகமானதால் அதை குடிநீருக்காகவோ, சமையலுக்காகவோ பயன்படுத்த முடியவில்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பக்கத்து ஊராட்சியான பள்ளிவர்த்தி கிராமத்தில் உள்ள கைபம்பில் குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வீராக்கி கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ஆதிச்சப்புரம் ஆர்ச் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து குழாய் அமைத்து வீராக்கி கிராமத்திற்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வீராக்கி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கூறியதாவது:- வீராக்கி கிராமத்தில் விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடிநீர் உப்பு தன்மையாக மாறிவிட்டதால், அருகில் உள்ள ஆதிச்சப்புரம் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வரிசையில் நின்று கைபம்பில் குடிநீர் பிடித்து வருவதால் வேலைக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது.
முதியவர்கள் ரூ.10 கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்கும் அவலநிலை உள்ளது. இன்னும் பல கஷ்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்.
எனவே எங்களுடைய பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்டகலெக்டர் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story