குலசேகரன்பட்டினம் தொழிலாளி கொலையில் 3பேர் கைது


குலசேகரன்பட்டினம்  தொழிலாளி கொலையில் 3பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 6:34 PM IST (Updated: 7 July 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி கொலையில் 3பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுயம்பு மகன் பெருமாள் (வயது 30), தொழிலாளி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பெருமாளுக்கு திருமணம் ஆகவில்லை. இவரது உடன் பிறந்த தங்கை திருமணமாகி திருக்களூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டில் பெருமாள் தலையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோதத்தில் கொலை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பெருமாள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது.
பெருமாளுக்கும், அவரது எதிர்வீட்டில் வசித்து வரும் சுடலைமுத்து குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் சுடலைமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, அக்காள் கல்யாணி ஆகியோரை கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெருமாள் அரிவாளால் வெட்டியது சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 5-ந் தேதி மாலையில் சுடலைமுத்து, அவரது மகன் மாதேஷ், உறவினர் செந்தில்நாதன் ஆகியோர் பெருமாளை ஆயுதங்களால் தாக்கினர். அப்போது பெருமாளின் உறவினர் ஆறுமுகநேரி கணேசபுரத்தை சேர்ந்த முத்து இதில் தலையிட்டு பெருமாளை வீட்டில் விட்டுச்சென்றார்.
பின்னர் மறுநாள் பெருமாள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து முத்து அளித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக சுடலைமுத்து, அவரது மகன் மாதேஷ், உறவினர் செந்தில்நாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story