வாணாபாடியில் மரங்களை அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிர்ப்பு. பணிகள் தடுத்து நிறுத்தம்


வாணாபாடியில் மரங்களை அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிர்ப்பு. பணிகள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 7 July 2021 7:11 PM IST (Updated: 7 July 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

வாணாபாடியில் மரங்களை அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, பொதுமக்கள் புகாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சிப்காட் 

ஊராட்சி மன்ற கட்டிடம்

ராணிப்பேட்டை அடுத்த வாணாபாடி கிராமத்தில் இலுப்பை தோப்பு என்ற பகுதி உள்ளது. இந்த தோப்பில் இலுப்பை மரம், அசோக மரம், நாகப்பழ மரம், தேக்கு மரம் உள்ளிட்ட மரங்கள் ஊர் பொதுமக்களால் உருவாக்கப்பட்டது. இந்த தோப்பு பகுதியில் திரவுபதி அம்மன், கங்கை அம்மன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.  இதனால் மகா பாரதம் உள்ளிட்ட சொற்பொழிவுகளும், ஊர் திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருகிறது.

இந்த தோப்பின் முன்பகுதியில், ஒருபுறத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் இருந்தது. இந்த இக்கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மரங்கள் ஏலம் நடைபெறப் போவதாக, நேற்று முன்தினம் வாணாபாடி கிராமத்தில் ஊராட்சி சார்பில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

மரங்கள் வெட்டப்பட உள்ளதாக வந்த அறிவிப்பை கேட்ட ஊர் பொதுமக்கள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வாலாஜாவில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் மரங்களை அகற்றி விட்டு, புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டுவதை நிறுத்த வேண்டும். மரங்களை அகற்றாமல், புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை கட்ட ஆவன செய்ய வேண்டும். மரங்கள் வெட்டப்பட்டால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் தலையிட்டு, மரங்கள் வெட்டப்பட்டு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்புக்கு தடை விதித்தனர். ஒரு மரம் கூட வெட்டப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story