தஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துணை இயக்குனர் சீராளன் கூறி உள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனரும், முதல்வருமான சீராளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர்,
2021-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 28-ந்தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், புகைப்படம் போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாகச் சென்று விண்ணப்பங்கள் இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2020-21-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
8-ஆம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50- செலுத்தவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் அல்லது முதல்வரை 9994043023, 9840950504, 8825565607, 8055451988, 7845529415 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story