பொதுமக்கள் புகார் குறித்து விசாரணை நடத்தாத போலீசார் மீது நடவடிக்கை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் எச்சரிக்கை
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் எச்சரிக்கை விடுத்தார்.
தர்மபுரி:
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் எச்சரிக்கை விடுத்தார்.
போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் காவல்துறை பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (தர்மபுரி), ஸ்ரீஅபினவ் (சேலம்), சாய்சரண் தேஜஸ்வி (கிருஷ்ணகிரி) மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், குழந்தை திருமணங்களை முழுமையாக தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக தர்மபுரி உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் பாதுகாப்புக்கான உதவி மையம் தொடங்கப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
தர்மபுரி மாவட்டத்தில் சாராய விற்பனை, மதுபானங்கள் கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் பாதுகாப்பு பணி மேம்படுத்தப்படும்.
மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை 3 கட்டங்களாக பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய ஆய்வின் மூலம் தீர்வு காணப்படும். நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றச்செயல்களை தடுப்பதற்கான கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
துறை ரீதியான நடவடிக்கை
போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்காத போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு மண்டலத்தில் ஏற்கனவே இத்தகைய புகாருக்கு உள்ளான சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசாருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை போலீஸ் ஐ.ஜி. சுதாகர் வழங்கினார்.
Related Tags :
Next Story