விலங்குகள் மூலம் பரவும் நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்


விலங்குகள் மூலம் பரவும் நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்  கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 July 2021 9:46 PM IST (Updated: 7 July 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

விலங்குகள் மூலம் பரவும நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்

கள்ளக்குறிச்சி

பிரசார வாகனம்

விலங்கின நோய்கள் தினத்தையொட்டி மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பரிசோதனை செய்ய வேண்டும்

விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்களில்இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ எவருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்களை விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்களான லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்கரப்டைஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். 
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். விலங்குகளால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

விலங்குகளின் கழிவுகள்

கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கொசுவலை மற்றும் கொசுவிரட்டிகளை பொதுமக்கள் உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எலி மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகளில் குளிப்பது மற்றும் நடப்பதை தவிர்ப்பதன் மூலம் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்றை தடுக்கலாம்.
வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதன்மூலம் அருகில் உள்ள நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்கலாம். ஸ்கரப்டைபஸ் மற்றும் குரங்கு காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள காடுகளில் நுழைவதையும், புதர் மற்றும் புல்வெளிகளில் ஓய்வு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கலைச்செல்வி, இளநிலை பூச்சி அலுவலர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மகாலிங்கம், ரவி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு மற்றும் களப்பணி உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.






Next Story