வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்


வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்
x
தினத்தந்தி 7 July 2021 5:00 PM GMT (Updated: 7 July 2021 5:00 PM GMT)

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். அவர்கள் வழி காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறை

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். அவர்கள் வழி காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

சுற்றுலா மையங்கள் 

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை உள்பட அனைத்து சுற்றுலா மையங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளதுடன், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. 

வருகை அதிகரிப்பு 

இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கி உள்ளது. இங்குள்ள கூழாங்கல் ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

அவர்கள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். ஆனால் அவர்கள் முகக்கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. 

இதனால் மீண்டும் வால்பாறையில் கொரோனா பரவக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

குளித்து மகிழ்ந்தனர் 

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி, பூஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

தற்போது கூழாங்கல் ஆறு பகுதிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். அவர்கள் அங்கு குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் சாலை ஓரத்தில் உள்ள தேயிலை செடிகளில் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். சுற்றுலா மையங்களில் மூடப்பட்டு இருந்த கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், அதை நம்பி வியாபாரம் செய்து வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வழிகாட்டு நெறிமுறைகள் 

இது ஒருபுறம் இருக்க, இங்கு சுற்றுலா வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் தொற்று பரவலை தடுக்க முடியும். 

எனவே அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து, இங்குள்ள சுற்றுலா மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 


Next Story