கூலிதொழிலாளி குத்திக்கொலை
கூலிதொழிலாளி குத்திக்கொலை
துடியலூர்
கோவையை அடுத்த கணுவாய் பகுதி சோமையனூர் திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 55) கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை சோமையனூர் பஸ் நிறுத்தம் அருகே பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தடாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, செந்தில்குமார் உடலில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்தார்.
மேலும் அவரது அருகில் கத்தியும் கிடந்தது.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் செந்தில்குமாரை கத்தியால் குத்தும் காட்சி பதிவாகி இருந்தது.
விசாரணையில், செந்தில்குமாரை கத்தியால் குத்திக்கொன்றது அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (30)என்பதும், அவர் தடாகம் பகுதியில் ஓட்டல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
சின்னதுரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் செந்தில் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்களாக எப்போதும் சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தினசரி வேலை முடிந்து, மாலையில் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்து, ஓட்டல் அருகே வைத்து குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 2 பேரும் மது பாட்டில்களை வாங்கிவந்து மது குடித்தனர். மது குடித்த சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டனர்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த சின்னதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் பயந்து போன சின்னதுரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சின்னதுரை பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
பின்னர் அங்கு மறைந்திருந்த சின்னதுரையை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story