குளத்தின் மதகு பகுதி சேதம்


குளத்தின் மதகு பகுதி சேதம்
x
தினத்தந்தி 7 July 2021 10:42 PM IST (Updated: 7 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குளத்தின் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதில் மதகு பகுதி சேதம் அடைந்துள்ளது.

தேனி : 

தேனி மாவட்டம் கூடலூரின் மையப்பகுதியில் ஒட்டாண்குளம் என்று அழைக்கப்படும் மைத்தலை மண்ணடியான்குளம் அமைந்துள்ளது. 

இந்த குளத்துக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் வழியாகவும், 18-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 

மேலும் இந்த குளத்துநீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஒட்டாண்குளம் தலைமதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. 


மேலும் கரை பகுதியில் உள்ள தடுப்புசுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன் வழியாக குளத்தில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். 



எனவே குளத்தில் சேதமடைந்த மதகு பகுதியை உடனே சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story