அழகு நிலைய பெண் உரிமையாளர் தற்கொலை


அழகு நிலைய பெண் உரிமையாளர் தற்கொலை
x
அழகு நிலைய பெண் உரிமையாளர் தற்கொலை
தினத்தந்தி 7 July 2021 10:42 PM IST (Updated: 7 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

அழகு நிலைய பெண் உரிமையாளர் தற்கொலை

கருமத்தம்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சோம னூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கங்காதேவி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கங்காதேவி அந்த பகுதியில் அழகுநிலையம் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வந்தார். அவர், பணி முடிந்து இரவு 8 மணிக்குள் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். 

ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்ப தாமதம் ஆனது. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் சீனிவாசன் மனைவியை பார்க்க அழகுநிலையத்துக்கு சென்றார்.

அப்போது கங்காதேவி கயிறுகளால் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ் திரி ஒட்டிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், கயிறுகளை அவிழ்த்து கங்காதேவியை மீட்டார்.


பின்னர் அவர் தனது மனைவியிடம் விசாரித்தார். அப்போது அவர், அழகு நிலையத்துக்குள் மர்ம ஆசாமிகள் 3 பேர் நுழைந்து தன்னை கட்டிப்போட்டு விட்டு, 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். 

இதனால் அவருக்கு ஆறுதல் கூறி சீனிவாசன் வீட்டுக்கு அழைத்து சென்றார். இதையடுத்து அழகுநிலையத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சீனிவாசன் சென்றார்.


இதையடுத்து போலீசார் அழகு நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். அங்கு கங்காதேவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சென்றனர். அழகுநிலையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.


மேலும் கங்காதேவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை மற்றும் தற்கொலைக்கு முன்பு கங்காதேவியுடன் யார்-யாரெல்லாம் பேசினார்கள்? என்று போலீசார் தீவிரமாக ஆய்வு வருகிறார்கள்.


இது குறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறும்போது, இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. கங்காதேவி தற்கொலை குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. உண்மையான நிலையை விரைவில் துப்பு துலக்கிவிடுவோம் என்றார்.

கங்காதேவியை, கொள்ளையர்கள் 3 பேர் கட்டிப்போட்டு  19 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

19 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில், அழகுநிலைய பெண் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story