கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 7 July 2021 10:43 PM IST (Updated: 7 July 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தரை இறங்கிய மேககூட்டத்தை ரசித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்:
 பூங்காக்கள் மூடல்

கொரோனா பரவல் குறைந்ததன் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையண்ட்  பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோக்கர்ஸ் வாக் ஆகியவை கடந்த 5-ந்தேதி திறக்கப்பட்டன.

இதனையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். ஆனால் அவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும் இருந்ததால் பூங்காக்கள் மற்றும் கோக்கர்ஸ் வாக் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் மூட உத்தரவிட்டடது.

திறக்கப்பட்ட 2 நாட்களிலேயே மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அலைமோதிய சுற்றுலா பயணிகள்

அதன்படி நேற்று காலை முதலே மோட்டார் சைக்கிள், கார்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆனால் சுற்றுலா இடங்கள் அனைத்து மூடப்பட்டிருந்ததால், பொழுதை போக்குவதற்கு வழியின்றி ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில் கொடைக்கானலில் நிலவிய ரம்மியமான சீதோஷண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.

தரை இறங்கிய மேககூட்டம்
 
கொடைக்கானலில் நேற்று காலை முதல் வெப்பம் நிலவியது. பின்னர் மாலை 3 மணி அளவில் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையில் நனைந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், அவ்வப்போது மேக கூட்டங்கள் தரை இறங்கி தள்ளாடின. அந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். 

அதே நேரத்தில் தரையிறங்கிய மேகமூட்டத்தால் வாகனஓட்டுநர்கள் சிரமம் அடைந்தனர். 

 மன்னவனூர், கூக்கால் ஏரிகள்

இதேபோல் கொடைக்கானல் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி  மன்னவனூர், கூக்கால் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகள் மற்றும் சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.

 இதற்கிடையே கொடைக்கானலில் மூடப்பட்ட அனைத்து சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Article-Inline-AD


Next Story