காலிக்குடத்துக்கு பூமாலை அணிவித்து புகார் கொடுத்த கவுன்சிலர்


காலிக்குடத்துக்கு பூமாலை அணிவித்து புகார் கொடுத்த கவுன்சிலர்
x
தினத்தந்தி 7 July 2021 10:46 PM IST (Updated: 7 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி காலிக்குடத்துக்கு மாலை அணிவித்து கவுன்சிலர் புகார் கொடுத்தார். இதனால் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சோபியாராணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதையடுத்து திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது செட்டிநாயக்கன்பட்டி 2-வது வார்டு கவுன்சிலர் செல்வநாயகம் தனது இருக்கையில் இருந்து எழுந்தார். பின்னர் தான் கொண்டு வந்த துண்டு பிரசுரம் ஒட்டப்பட்ட காலிக்குடத்துக்கு பூ மாலை அணிவித்தார்.
முறைகேடு புகார்
பின்னர் அந்த குடத்தை ஒன்றியக்குழு தலைவர் இருக்கை அருகே கொண்டு சென்று வைத்துவிட்டு தலைவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கிராமப்புற மக்களின் நலனுக்காக ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க பொதுமக்களிடம் இருந்து முன்பணம் மற்றும் தண்ணீர்வரி பெறப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. அவையும் தரமற்ற முறையில் உள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்கிடையே குடிநீர் குழாய் பதிக்கும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக குடிநீர் குழாய் இணைப்பு கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே இந்த பிரச்சினையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ஒன்றியக்குழு தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மிரட்டல்
அதையடுத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலை, பாலம் கட்டும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்காமல் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். அதுபோன்ற செயலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவரிடம் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார். அதன் பின்னர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. காலிக்குடத்துடன் வந்த கவுன்சிலரால் ஒன்றியக்குழு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story