நீலகிரியில் உற்பத்தியாகும் மருத்துவ குணங்கள் கொண்ட வெள்ளை தேயிலைத்தூள்
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட வெள்ளை தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு கிலோ ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
குன்னூர்,
இந்திய அளவில் கருப்பு, பச்சை, வெள்ளை உள்ளிட்ட வகையான தேயிலைத்தூள் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சீனாவிலும், ஜப்பானிலும் ஒலாங் வகை தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மலைபிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேயிலைத்தூள் வாரந்தோறும் நடைபெறும் ஏல மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியில் பச்சை, வெள்ளை வகை தேயிலைத்தூள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், வெள்ளை தேயிலைத்தூள் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுவதால், ஏல மையத்துக்கு கொண்டு செல்லாமல் உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
வெள்ளை தேயிலைத்தூள் உற்பத்தி குறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-
வெள்ளை தேயிலைத்தூள் உற்பத்தி செய்ய தேயிலை செடிகளில் உள்ள உருண்டையான வடிவம் கொண்ட பச்சை தேயிலை மொட்டுக்களை பறிக்க வேண்டும். அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பாக செடிகளில் இருந்து பறிக்க வேண்டும். 5 கிலோ பச்சை தேயிலை மொட்டுக்கள் இருந்தால் தான் ஒரு கிலோ வெள்ளை தேயிலைத்தூள் தயாரிக்க முடியும்.
வெள்ளை தேயிலைத்தூளில் பாலிபினால் என்ற பொருள் சேதமாகாமல் முழுமையாக கிடைக்கிறது. இதனால் ரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் என பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை தருவதால் கொரோனா நோய் தொற்று காலத்தில் இதன் தேவை அதிகரித்து இருந்தது.
வளைகுடா நாடுகளுக்கு வெள்ளை தேயிலைத்தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு இந்தியாவில் 1000 கிலோ (1 டன்) மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 65 சதவீதம் உற்பத்தியாகிறது. இதன் உற்பத்தி குறைவு என்பதால், விலை மிகவும் அதிகமாக உள்ளது.
வெள்ளை தேயிலைத்தூள் சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே 21-ந் தேதி உலக தேயிலை தினம் கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் பறிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளை தேயிலைத்தூள் ஜூன் 21-ந் தேதி ஏலத்தில் விற்பனைக்கு வந்தது.
இதில், குன்னூர் அருகே பில்லிமலையில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் தயாரித்த சில்வர் லேபிள் எக்சல் என்ற வெள்ளை தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.16 ஆயித்து 400-க்கு ஏலம் போனது. சில்வர் நீடில் ஸ்பெஷல் என்ற வெள்ளை தேயிலைத்தூள் ரூ.15 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story