ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் கடைகளில் வியாபாரம் மந்தம்
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், அதனருகே கடைகளை திறந்தும் வியாபாரம் மந்தமாக இருந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை நம்பி சுற்றுலா தலங்கள் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டும், கூட்டம் கூடினால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை.
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ஊட்டியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் வருவதால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், அதன் அருகே கடைகளை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள், வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள உல்லன் ஆடைகள், பழங்கள், சாக்லெட் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வரவில்லை.
இதனால் கடைகள் திறந்தும் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். திபெத்தியன் மார்க்கெட்டில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளது.
நகர் பகுதிகளில் பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால் சுற்றுலா தலங்கள் அருகே உள்ள கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்தால்தான் பொருட்கள் விற்பனையாகும். இதனால் சுற்றுலா பயணிகள் எப்போது வருவார்கள் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் கடைகளை திறந்து வைத்தும் வியாபாரம் இன்றி நீண்டநேரம் காத்திருக்கிறோம். ஊரடங்கு தளர்வில் அனைத்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டும், சுற்றுலா பயணிகள் இல்லாததால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற சுற்றுலா தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story