நீலகிரி மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், உலக உயிரியல் (ஜூனோசிஸ்) தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் ஊட்டி கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தலைமை தாங்கினார்.
முகாமில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக எலி காய்ச்சல், குரங்கு காய்ச்சல் போன்ற தொற்று குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, உயிரியல் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங், ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-
விலங்குகளுடன் தொடர்பு, விலங்குகள் பயன்படுத்திய பொருட்களை மனிதர்கள் பயன்படுத்தும் போது நோய் தொற்று பரவுகிறது. மேலும் செல்லப்பிராணிகள், இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளிடம் இருந்து தொற்று பரவக்கூடும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை நன்றாக கழுவினால் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
நீலகிரியில் குரங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநில எல்லையையொட்டி வசித்து வரும் பழங்குடியின மக்கள் உள்பட மொத்தம் 5,000 பேருக்கு தடுப்பூசி ஆண்டுதோறும் செலுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இதுவரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story