பழைய கலெக்டர் அலுவலகம் பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்கப்படும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்


பழைய கலெக்டர் அலுவலகம் பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்கப்படும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
x
தினத்தந்தி 7 July 2021 10:59 PM IST (Updated: 7 July 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

கடலூர்,

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. 
  இதனால் கட்டிடம் பழமை மாறாமல் கம்பீரமாக காட்சி அளித்தது. இதற்கிடையில் புதிதாக கடலூர் குண்டுசாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது. இதனால் அனைத்து துறை அரசு அலுவலகங்களும் அங்கு மாற்றப்பட்டது. 

பழைய கலெக்டர் அலுவலகம் அப்படியே விடப்பட்டது. தற்போது அதில் அருங்காட்சியகம், மீன்வளத்துறை, வனத்துறை அலுவலங்கள் மட்டும் செயல்படுகிறது. மற்ற அறைகள் காலியாக உள்ளது. 

அதிலும் சில இடங்களில் சேதமடைந்து வருகிறது. சுவர்களில் செடி, கொடிகள் முளைத்து விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் நீர்க்கசிவும் வந்தது.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து இந்த பழைய கலெக்டர் அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பழைய கலெக்டர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், இந்த கட்டிடத்தை பழமை மாறாமல், புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.


பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் சில இடங்களில் சேதமடைந்து உள்ளது. சில இடங்களில் மழைநீர் ஒழுகுகிறது.

 இதனால் இந்த கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். 

திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பி, அரசு அனுமதி கொடுத்ததும் இந்த கட்டிடம் புனரமைக்கப்படும். அதன்பிறகு அரசு அலுவலகங்கள் இங்கு செயல்படும் என்றார்.

அப்போது கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பாலமுருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story