பெண்கள், முதியோர் உதவி எண்கள் மூலம் வந்த 155 புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை


பெண்கள், முதியோர் உதவி எண்கள் மூலம் வந்த 155 புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 July 2021 11:04 PM IST (Updated: 7 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள், முதியோர் உதவி எண்கள் மூலம் வந்த 155 புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலூர், 

பெண்களின் நலன் காக்க லேடிஸ் பர்ஸ்ட் 2200 06082, முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் 82200 09557 என்ற புதிய போலீஸ் உதவி எண்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சமீபத்தில் அறிமுகப் படுத்தினார். 

லேடிஸ் பர்ஸ்ட் உதவி எண்ணில் இதுவரை 101 புகார்கள் பதிவாகி உள்ளது. இதில் 14 புகார்களுக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 புகார்களில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மகனின் படிப்புக்கு வங்கியில் கல்வி கடன் மற்றும் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது கொரோனா காரணமாக பணம் கட்ட சொல்லி முகவர்கள் வற்புறுத்துவதாகவும், உதவி செய்யுமாறு 3 பெண்கள் புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி, தனியார் நிதி, தனியார் நிறுவனத்துடன் பேசி கால அவகாசம் பெற்று தரப்பட்டுள்ளது. உணவு கேட்ட 3 பெண்களுக்கு உணவு பொருட்கள், கணவன், மனைவி தகராறு, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் போன்ற பல்வேறு புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டது.

தீர்வு

முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் 82200 09557 என்ற உதவி எண்ணில் இது வரை 54 முதியவர்கள் புகார் தெரிவித்தனர். 8 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 19 புகார்களில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டது. 70 வயது முதியவருக்கு ஓய்வு பண பலன் கிடைக்கவும், 90 வயது முதியவரிடம் சொத்தை எழுதி வாங்கி, அவரது மகன் துரத்தியதாக வந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் நிவாரண உதவி, வேலி பிரச்சினை போன்ற பல்வேறு புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி, தக்க அறிவுரை வழங்கி தீர்வு காணப்பட்டது.


Next Story