திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் :
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் கமலா நேரு அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதற்கு மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இதற்கிடையே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நலப்பணிகள் துணை இயக்குனர் பூங்கோதை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து மாநகர்நல அலுவலரிடம் கேட்ட போது, தடுப்பூசி போடுவதற்காக விண்ணப்பித்த கர்ப்பிணிகளில் 50 பேருக்கு இன்று (அதாவது நேற்று) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்னதாக அவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி போட்ட பின்னர் கர்ப்பிணிகள் தனி வார்டில் அமர வைக்கப்பட்டு சிறிது நேரம் கண்காணிக்கப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படவில்லை என்று உறுதியாக தெரிந்ததும் தான் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story