கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதம்


கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதம்
x
தினத்தந்தி 7 July 2021 11:44 PM IST (Updated: 7 July 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக முகாம் நடைபெறாததால் 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஜூலை.8-
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக முகாம் நடைபெறாததால் 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி மொத்தம் 2 டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் முதல் டோஸ் செலுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமல் அதனை தவிர்த்தனர். கொரோனா 2-வது அலையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட பின் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மக்கள் உணரத்தொடங்கினர். அதனால் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
முகாம் நடைபெறவில்லை
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மட்டும் கடந்த ஒரு வாரமாக போடப்பட்டு வந்தன.
 கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோவிஷீல்டு டோஸ்களும் காலியானதால் நேற்று தடுப்பூசி முகாம் எதுவும் நடைபெறவில்லை. மாநிலத்தில் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே முகாம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் ஒரு மாதத்திற்கு பின் 2-வது டோஸ் போட வேண்டி உள்ளது.
ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 2-வது டோஸ் போட முடியவில்லை. ஒரு மாத காலத்தை தாண்டியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் எப்போது டோஸ் வரும் என எதிர்பார்த்துள்ளனர். ஒரு சிலர் 2-வது டோஸ் செலுத்துவதில் தாமதமானதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சத்திலும் உள்ளனர்.
2 லட்சத்து 90 ஆயிரம் டோஸ்கள்
இது குறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, `கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தி கொள்வதில் தாமதமானால் அச்சப்பட தேவையில்லை. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தடுப்பூசி டோஸ்கள் வந்ததும் செலுத்தி கொள்ளலாம். 2 டோஸ்கள் செலுத்தி கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்' என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தடுப்பூசிகள் முதல் டோஸ், 2-வது டோஸ் என மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 544 டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story