கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தரமற்ற உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின்ராஜரத்தினம், அன்புபழனி, பிரசாத், இளங்கோவன், பத்மநாபன், அருண்மொழி, மோகன், கதிரவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் 55 லிட்டர், காலாவதியான உணவு பொருட்கள் 7 கிலோ, கெட்டுப்போன எண்ணெய் 8 லிட்டர் மற்றும் அழுகிய பழங்கள் 5 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளின் கீழ் எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். பின்னர் இந்த பொருட்கள் நகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.
மேலும் உணவு வணிகர்களுக்கு அதிக நிறமேற்றப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என்றும், விவர சீட்டு இல்லாமல் பொட்டலமிடப்பட்ட எந்தவித உணவுப்பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story