மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்று பெண் தற்கொலை


மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 July 2021 3:01 AM IST (Updated: 8 July 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா அருகே, குடும்ப தகராறில் மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் ஏரியில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மண்டியா: மண்டியா அருகே, குடும்ப தகராறில் மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் ஏரியில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 
இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்ப தகராறு

மண்டியா (மாவட்டம்) தாலுகா கெரேகோடு ஹோப்ளி கவுடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ். இவரது மனைவி சின்சனா(வயது 33). இவர்களுக்கு 6 வயதில் மகேந்திரா என்ற மகனும், 4 வயதில் திம்பனா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சின்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சின்சனா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் நாகமங்களா தாலுகா ஹுல்லேனஹள்ளி கிராமத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

சமாதானம் செய்ய முயற்சி

அதன்பிறகு அவர் தனது கணவரிடம் செல்போன் மூலம் பேசி சமாதானம் அடைந்து வாழ முயன்றார். ஆனால் சின்சனாவிடம் அவரது கணவர் கிரீஷ் தொடர்ந்து தகராறு செய்து வந்தார். இதனால் மனமுடைந்த சின்சனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தன்னுடைய குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என்று நினைத்த அவர், தனது குழந்தைகளையும் கொன்றுவிட திட்டமிட்டார். 

அதன்படி நேற்று காலையில் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் கிராமத்தையொட்டி உள்ள ஏரிக்கு சென்றார். அங்கு ஏரியில் தனது மகன் மற்றும் மகளை தள்ளி கொலை செய்தார். இன்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி நாகமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஏரியில் இருந்து சின்சனா மற்றும் அவரது குழந்தைகளின் உடல்களை மீட்டனர். 

சோகம்

பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story