முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கின் அசையா சொத்துகள் ஜப்தி


முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கின் அசையா சொத்துகள் ஜப்தி
x
தினத்தந்தி 8 July 2021 3:06 AM IST (Updated: 8 July 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நகைக்கடை அதிபர் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கின் அசையா சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டில், அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை அதிபர் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கின் அசையா சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டில், அரசு தெரிவித்துள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி மோசடி

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடைகள் நடத்தியவர் மன்சூர்கான். இவர், பொதுமக்களிடம் இருந்து நகை சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் வசூலித்த ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்திருந்தார். இதுகுறித்து கர்நாடக அரசு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மன்சூர்கானிடம் இருந்து முன்னாள் மந்திரியான ரோசன் பெய்க் பல கோடி ரூபாய் பெற்றிருப்பதாகவும், மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரோசன் பெய்க் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ரோசன் பெய்க்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். தற்போது அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு, அதனை திரும்ப கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மன்சூர்கானின் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டு இருந்தது.

ரோசன் பெய்க் சொத்துகள் ஜப்தி

அதுபோல், நகைக்கடை மோசடி வழக்கில் ரோசன் பெய்க் சொத்துகளையும் ஜப்தி செய்ய கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவரது சொத்துகளை ஜப்தி செய்வதில் அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு கர்நாடக ஐகோர்ட்டு, அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் சுதாரித்து கொண்ட அரசு, கடந்த முறை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த, நகைக்கடை அதிபர் மோசடி வழக்கில் ரோசன் பெய்க்கின் சொத்துகளை ஜப்தி செய்யும் பணி தொடங்கி இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வக்கீல் விஜய்குமார் பட்டீல் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும் போது, ரோசன் பெய்க்கின் சொத்துகள் ஜப்தி செய்யும் பணி தொடங்கி இருப்பதாகவும், முதற்கட்டமாக அவரது அசையா சொத்துகள், வங்கி கணக்குகளில் இருந்த பணம் ஜப்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு குறித்து அடுத்த விசாரணையில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ரோசன் பெயக்குக்கு சொந்தமான மற்ற சொத்துகளையும் ஜப்தி செய்யும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story