சேலத்தில் 2 கடைகளில் தீ விபத்து- ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்


சேலத்தில் 2 கடைகளில் தீ விபத்து- ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 July 2021 4:54 AM IST (Updated: 8 July 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

சேலம்:
சேலத்தில் 2 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மளிகை கடை
சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 44). இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையையொட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று அதிகாலை மளிகை கடையில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் மளிகை கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் பெருமாள் கடைக்கு விரைந்து வந்தார்.
தீயை அணைத்தனர்
இதற்கிடையே தீ விபத்து தகவல் அறிந்தவுடன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
தீவிபத்தில் கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சோப்பு, பவுடர் உள்ளிட்ட அழகுசாதன பொருட்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு கடையில் தீ
இதேபோன்று உடையாப்பட்டி அருகே அதிகாரிபட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையிலும் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதிலும் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்தும் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story