ஓமலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்-கட்சி நிர்வாகிகளுக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்


ஓமலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்-கட்சி நிர்வாகிகளுக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2021 5:00 AM IST (Updated: 8 July 2021 5:00 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று ஓமலூரில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

ஓமலூர்:
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று ஓமலூரில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சந்திரசேகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் மணி (ஓமலூர்), ராஜா என்ற ராஜமுத்து (வீரபாண்டி), சுந்தரராஜன் (சங்ககிரி), ஜெய்சங்கர் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பூத் வாரியாக...
தொடர்ந்து ஓமலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு மன்ற செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது. பூத் வாரியாக இன்னும் கூடுதலாக உழைத்து இருந்தால் இன்று அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கும்.
ஒற்றுமையுடன்...
எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறும் வகையில் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நமது இலக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த அ.தி.மு.க.வினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மணிமுத்து, நகர செயலாளர்கள் சரவணன், கணேசன் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story