திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் எதிரொலி: தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது; உதவி பேராசிரியை மீதும் வழக்கு


திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் எதிரொலி: தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது; உதவி பேராசிரியை மீதும் வழக்கு
x
தினத்தந்தி 8 July 2021 8:06 AM IST (Updated: 8 July 2021 8:06 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் எதிரொலியாக திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது செய்யப்பட்டார். உதவி பேராசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஸ்ரீரங்கம், 
மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் எதிரொலியாக திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது செய்யப்பட்டார். உதவி பேராசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பாலியல் சீண்டல்

திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லூரி முதல்வரிடம் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர். 

பாலியல் சீண்டலுக்கு அக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றும் நளினி சுந்தரி என்பவர் துணை போவதாகவும், இதன் காரணமாக தாங்கள் கல்லுாரிக்கு வருவதற்கு பெற்றோர் அச்சம் தெரிவிப்பதாகவும் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டினர். 

அதாவது, தமிழ்த்துறை தலைவரை சந்திக்க செல்லும் மாணவிகள் நன்றாக முகத்திற்கு மேக்கப் போட்டு போக வேண்டும் என உதவி பேராசிரியை அறிவுறுத்தி இருக்கிறார். இதனைதொடர்ந்து கல்லூரி முதல்வர் உத்தரவின்பேரில், துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

பணியிடை நீக்கம்

அதில் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் உறுதிப்படுத்தப்பட்டதால், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகனை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய இந்து மகாசபா தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட சமூகநல அலுவலர் தமீமுனிசா தலைமையிலான குழுவினரும் கல்லூரிக்கு சென்று 2 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு அக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட சமூக நல அலுவலரால், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மற்றும் உதவி பேராசிரியை நளினி சுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டது.

தமிழ்த்துறை தலைவர் கைது

அந்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி நடத்திய நேரடி விசாரணை நடத்தினார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மற்றும் உதவி பேராசிரியை நளினி சுந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த நிலையில் பால் சந்திரமோகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 பி (ஆபாசமாக பேசுதல்), 354 ஏ மற்றும் பி (பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை), 509 (பெண்களை அவமரியாதை செய்தல்) 109 (சட்டவிரோத செயலுக்கு தூண்டுகோலாக இருத்தல்) மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

சிறையில் அடைப்பு 

கைதான பால் சந்திரமோகன் மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் பாலியல் புகாரில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story