திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க ரூ.3½ கோடியில் நவீன வசதி டெல்லியில் இருந்து தொழில்நுட்ப குழு வருகை
திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க ரூ.3½ கோடியில் நவீன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து தொழில்நுட்ப குழு திருச்சிக்கு வந்துள்ளது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க ரூ.3½ கோடியில் நவீன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து தொழில்நுட்ப குழு திருச்சிக்கு வந்துள்ளது.
புதிய முனையம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.850 கோடியில் புதிய முனையம் கட்டுமான பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணி 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டு காலமாக ஓடுதளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக பகல் நேரத்தில் இந்த சீரமைப்பு பணி நடைபெற்று வந்ததால் பகல் நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்கள் தரை இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஓடுதளம் சீரமைக்கும் பணி
இதனை தொடர்ந்து தற்போது இரவு நேரத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரவு நேர விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படாததால் ஓடுதளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வர ஏதுவாக உள்ளது.
அதே நேரம் ஊரடங்கு காரணமாக ஓடுதளம் சீரமைக்கும் பணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெறவேண்டிய இந்த பணி இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.
9 பேர் கொண்ட குழு
முக்கியமாக விமானங்கள் மென்மையாக தரையிறங்கும் விதத்தில் ஓடு தளமானது மேம்படுத்தப்பட்டு ‘இன்ஸ்ட்ருமெண்ட் லேண்டிங் சிஸ்டம்’ இடம்பெறுகிறது. இதற்காக ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியிலிருந்து விமான நிலைய ஆணைய குழுவின் 9 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் நேற்று காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
மேலும் இந்தக் குழுவானது வருகிற 21-ந்தேதி வரை திருச்சி விமான நிலைய ஓடு தளத்தின் புதிய லேண்டிங் சிஸ்டத்தை நிறுவும் பணியை மேற்கொள்வார்கள். இந்த புதிய லேண்டிங் சிஸ்டத்தால் திருச்சி விமான நிலையம் மேலும் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story