தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வக டாக்டர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்த டாக்டர்கள், பணியாளர்களை கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்த டாக்டர்கள், பணியாளர்களை கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
பரிசோதனை
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து ஆய்வக டாக்டர்கள், பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
5 லட்சம் பேருக்கு பரிசோதனை
அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் நுண்ணுரியல் துறையின் மூலம் கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) ஆய்வகம் கடந்த 18.4.2020 முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி 3 ஆயிரத்துக் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகம் ஆகும். தமிழகத்தில் தான் கொரோனா தொற்றுக்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா 2-வது அலை அதிகமாக உள்ள காலத்தில் தினசரி 4 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 24 மணி நேரமும் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகளை வழங்கியது பாராட்டுக்கு உரியது. இரவு பகல் பாராமல் நீங்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில்தான் மாவட்ட நிர்வாகம் கொரோனா நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதற்கு உங்களின் உழைப்பும் பாராட்டுக்கு உரியது. இந்த பரிசோதனை மையம் எந்த அலை வந்தாலும் சிறப்பாக சமாளிக்கும் திறன் கொண்டது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, நுண்ணுரியல் துறை தலைவர் ஜெயமுருகன் மற்றும் டாக்டர்கள், ஆய்வக நுட்பனர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story