மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கக் கோரி பொதுமக்கள் தர்ணா


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  அமைக்கக் கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 July 2021 7:32 PM IST (Updated: 8 July 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

மாதனூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

ஆக்கிரமிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் கோபிநாத், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள கொட்டகையை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் 4 மணி நேரம் நீடித்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரப்பு ஏற்பட்டது.

Next Story