திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாணியம்பாடி
சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல்.சாலை, பஸ் நிலையம் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் வாணியம்பாடியில் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
அதேபோன்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் இ.பரத் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கண்டித்தும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நெடுமாறன், விஜயராகவன், மகேந்திரன், ரவி, ஒன்றிய தலைவர் ஜாவித் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story